×

முதல்வரை கண்டித்து தெலுங்கு யுவ ஜன மாணவர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்-சித்தூரில் 100க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

சித்தூர் :  தெலுங்கு யுவ ஜன மாணவர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெகன் மோகனை கண்டித்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

இதுகுறித்து தெலுங்கு யுவ ஜன மாணவர்கள் சங்க மாவட்ட தலைவர் காஜூர் ராஜேஷ் கூறியதாவது:  ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் மாநிலம் முழுவதும் தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட பாத யாத்திரையின்போது முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். அதேபோல் முதலமைச்சரானார். தொடர்ந்து,  ஒரு வாரத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 10 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்வேன் என உறுதி அளித்தார்.

ஆனால் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்தது. தற்போது வரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை  கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 577 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க உத்தரவு பிறப்பித்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநிலம் முழுவதும் வருடத்திற்கு பல லட்சம் பட்டதாரிகள் வேலையில்லாமல் கூலி வேலை செய்து வருகிறார்கள். ஏராளமான இளைஞர்கள் இங்கு வேலையில்லாமல் அண்டை மாநிலமான கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஒரு வேலை கூட கிடைக்காத அவல நிலை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்தது. அதன் மூலம் படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜெகன்மோகன் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆந்திர மாநிலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றுகூட முதலீடு செய்யவில்லை. ஒரு தொழிற்சாலை கூட ஆந்திர மாநிலத்தில் அமைக்க தொழில் நிறுவனங்கள் ஒன்று கூட முன்வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் மாநிலத்தில் நிறுவனங்கள் அமைக்க  ஆளும் கட்சியினர் பங்கு கேட்கிறார்கள். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களும் சரி தனியார் நிறுவனங்களும் சரி ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருவதில்லை.

அதேபோல் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாநில அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை இது கண்டிக்கத்தக்கது. மேலும் தனியார் பள்ளிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஏழை எளிய மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் அவர்கள் படித்து முடித்த பிறகு அவர்களின் மாற்றுச் சான்றிதழ் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் வழங்கவில்லை. இதனால் தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால் மாநில அரசு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கவில்லை. இதனால் நீங்கள் பணம் செலுத்தி உங்கள் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு செல்லுங்கள் என தெரிவிக்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் முதலமைச்சராக பதவி வகித்தார்கள். அவர்கள் ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களிலும், அரசு துறையிலும் வேலை கிடைத்து பணிகள் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது உள்ள ஆளும் அராஜக ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து ஆந்திர மாநில தெலுங்கு யுவ ஜன சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை தடுக்க வேண்டும் என மாநில முதல்வர் ஜெகன் மோகன் போலீசாரை தூண்டி விட்டு நாங்கள் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட விடாமல் தடுத்து வருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் ஆந்திர மாநில மாணவர்கள் சங்க அதிகார பிரதிநிதி வருண், ஏஐஎஸ்எப் மாணவர் சங்க மாவட்ட தலைவர் சசிகுமார், துணை தலைவர் பிரபு தேஜா உள்பட ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவதாக மூன்று நாட்களுக்கு முன்பு தெலுங்கு யுவ ஜன சங்கம் அறிவித்ததையொட்டி நேற்று முன்தினம் இரவே மாணவர்கள் சங்க தலைவர்கள் துணை தலைவர்களை போலீசார் வீட்டுக்காவலில் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று சித்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வருவதாக அறிந்த போலீசார் சித்தூர் மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் பஸ்கள் என அனைத்தையும் சோதனை செய்தனர். அதில் வரும் இளைஞர்களை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

சித்தூர் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிபாலா பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து அவ்வழியாக வருபவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். அதேபோல் திருத்தணி சாலை, திருப்பதி சாலை, பலமனேர், காணிப்பாக்கம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவ்வழியாக வரும் மாணவ மாணவிகள் அனைவரையும் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், போலீசாரின் கண்ணில் மண் தூவி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக கைது செய்து சித்தூர் முதலாவது காவல் நிலையம், இரண்டாவது காவல் நிலையம் மற்றும் யாத மரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து,  மாலை வரை காவலில் வைத்து பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். இதனால் சித்தூர் மாநகரத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Yuan Jan Jan Jan Students Union , Chittoor: The Telugu Yuva Jana Students' Union (IYJU) has condemned Chief Minister Jagan Mohan across the state for emphasizing various demands
× RELATED மும்பையில் புழுதிப்புயல்; 59 பேர் காயம்; 3 பேர் உயிரிழப்பு!